மனம் என்னும் கண்ணாடி
September 29, 2010 Leave a comment
ரமேஷ் அன்றைக்குக் கொஞ்சம் லேட்டாஹவே தான் எழுந்தான். ‘ஐயோ மணி 8 ஆயிடுச்சே. ஆபீஸ்ல இன்னிக்கு 9 மணிக்கு மீட்டிங் இருக்கே’. பதட்டத்துடன் எழுந்து குளிக்க போனான். ‘ச்சே இந்த மார்கழி மாசத்துல குளிக்கிறதே ஒரு பெரிய கஷ்டமப்பா’ என்று நொந்து கொண்டு ஹீட்டர் சுவிட்சை அழுத்தினான். ‘கடவுளே… இன்னிக்கு கரண்ட் இல்லையா?’. EB ஐ திட்டிக்கொண்டே குளிக்கப் போனான். இன்னிக்கு ஆரம்பமே சரி இல்லையே – முகத்தில் சிறு கோபத்தோடு கிளம்பினான்.
இன்னிக்கு லேட்டா எழுந்ததால கால சாப்பாடும் போச்சு. ஹ்ம்ம்… என்ன வாழ்க்கைடா சாமி – தன்னை நொந்து கொண்டே பஸ் ஸ்டாப் வந்தான். ‘இனி இந்த பிரச்சனை வேறையா’. 10 நிமிஷமா அங்கு வர வேண்டிய 42C உம் வரவில்லை. BP ஏறிக்கொண்டே போக வாய் போக்குவரத்துக் கழகத்தத் திட்டிக்கொண்டே இருந்தது. பஸ் வந்தவுடனே கூட்டத்தில் முண்டி அடித்துக்கொண்டு எறியும் சீட் கிடைக்க வில்லை. அந்தக் கூட்ட நெரிசலுக்கு, இந்த மார்கழிக் குளிருக்கும் அவனுக்கு வேர்த்துக்கொட்டியது. ‘ச்சே. இதுக்கு கஷ்டப்பட்டு குளிக்காமலே வந்திருக்கலாம் போல’, மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டான். இப்படி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே ஒருத்தன் வேகமாக வந்து அவனை கடந்து சென்றான். போனவன் சும்மா போனானா, இவன் போட்டிருந்த கருப்பு பேன்ட்டை அவன் கால் தூசியால் அழுக்காக்கி போனான். பின்னால் திரும்பி ‘சாரி’ என்று ஒரு அசட்டு சிரிப்பு வேறு. ‘இந்தக் கூட்டத்துல இப்படி வேகமா முந்திட்டு எங்க தான் போறானுங்களோ இவனுக. இதுல சிரிப்பு வேற’ – மனசுக்குள்ளே அவனை திட்டினான்.
தன் ஆபீஸ் ஸ்டாப் வந்தவுடனே ஏறிய அதே அவசரத்தில் இறங்கினான். 4 கால் பாய்ச்சலில் இப்போ ஆபீஸ் போயே ஆகணும் என்று ஓட சரியாய் இருந்த நேரம் பார்த்து, ‘ரமேஷ் தம்பி’ என்று ஒரு குரல். ‘எவன் டா அவன் நேரம் காலம் தெரியாம கூப்பிடறான்’ – திரும்பிப் பார்த்தான். அட கீழ் வீட்டு ஓனர். தன் 1 வயதுக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். ‘என்ன தம்பி இந்தப் பக்கம்’ ஓனர் அசடாகக் கேட்டு வைத்தார். ‘ஆபீஸ் இங்க தான் இருக்கு’. ‘ஓ அப்படியா, இங்கதான் எங்க மாமியார் வீடு இருக்கு. இவனோட அம்மா நேத்து நைட் அவசரமா அவங்க அம்மாக்கு உடம்பு சரி இல்லன்னு வந்துட்டா. பையன் அவ இல்லாம அழுது துடிச்சிட்டான். அதான் இங்க தூக்கிட்டு வந்தேன்’. இவனுக்கு அவர் சொன்ன எதுவுமே ஏறவில்லை. ‘ஓ அப்படியா’ என்று இவனும் அசடு வழிந்தான். சிரிக்க முயன்றான். ‘என்னடா குட்டி. அழுதியா’ என்று கொஞ்ச முயன்றான். இவனோட முகத்தைப் பார்த்ததுமே அமைதியாய் இருந்த குழந்தை அழும் நிலைமைக்கு போய்விட்டது. நொந்து கொண்டே ‘சரி நான் கிளம்பறேன் சார். மீட்டிங் இருக்கு’ என்று நழுவினான்.
நினைத்த மாதிரியே மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. பாதியிலே போய் சேர்ந்தான். ஆச்சர்யம். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. மீட்டிங் முடிந்து வந்து அவன் இருக்கையில் உட்கார்ந்தான். ‘எவ்வளோ கஷ்டம் மனுஷனுக்கு’. அப்பாடா… என்று கொஞ்சம் மூச்சு விட்டான். ‘அது எப்படி டா… நீ மட்டும் இவ்ளோ லேட்டா வர்ற… உன்ன மட்டும் அந்த மேனேஜர் மண்டையன் ஒன்னும் சொல்ல மாட்டேன்றான்’ விஜய் வந்து கொஞ்சம் உசுப்பேத்தி விட்டான். சிரித்துக்கொண்டே அவனை அனுப்பி வைத்தான். சாமி குடுத்தாலும் பூசாரி விட மாட்டான் போலேயே என்று முனகிக்கொண்டான்.
அன்றைய பொழுது முழுதும் இறுக்கமாகவே சென்றது. வீட்டுக்கு வரும்போதும் அதே இடி-தடியுடன் அவனது ஸ்டாப்பில் இறங்கினான். ‘ச்சே இன்னிக்கு பார்த்து குடை எடுக்க மறந்துட்டேனே’ என்று மறுபடி அவனை நொந்து கொண்டு, அதிசயமாய்ப் பெய்த மழையில் நனைந்து கொண்டே நடந்தான். தொப்பல் தொப்பலாய் என்றும் சாப்பிடும் மெஸ்ஸினுள் நுழைந்தான். ஏற்கனவே அன்று முழுவதும் இருந்த இறுக்கம் இப்பொழுது மழையில் நனைந்தவுடனே கோபமாகவே மாறி இருந்தது. ‘அட என்னடா இன்னிக்குப் பார்த்து மெஸ் காலியா இருக்கு’ என்று சந்தேகத்துடன் உள்ளே நுழைந்தான். ‘இந்த மழை பேஞ்சாலே இப்படித் தான்.. பிசினெஸ் ஓடாது’ அவனுடைய மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மாதிரி மெஸ் ஓனர் அம்மா சிரித்துக்கொண்டே பேச்சை ஆரம்பித்தார். ‘ஐயையோ… அப்போ இன்னிக்கு லாஸ்சுங்களே…’ என்றான் ரமேஷ் பரிதாபத்துடன். ‘ஆமாங்க இப்படித்தான் அப்போ அப்போ ஆயிடுது’. சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த அம்மா. ‘எப்படிங்க சிரிச்சுட்டே சொல்றீங்க’ ரமேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான். ‘இதெல்லாம் நடக்கிறது தானேங்க. எப்போவுமே நல்லா இருந்தா நமக்கும் போர் அடிக்கும், அப்போ அப்போ இப்படி இருந்தாத்தானே லாபத்தோட அருமை தெரியும். ஐயோ இன்னிக்கு நஷ்டம் ஆயிடதேன்னு உட்கார்ந்து பீல் பண்ணினா உங்கள மாதிரி சாப்பிட வர்றவங்களை கவனிக்க முடியாதுங்களே’ சிரித்துக்கொண்டே முடித்தார் அந்த அம்மா. டக் என்று ஏதோ அவன் மனம் லேசானது. சாபிட்டு முடித்ததே தெரியவில்லை அவனுக்கு, அந்த அம்மா சொன்ன அந்த கடைசி வரி இவனை ஏதோ உலுக்கியது போல் இருந்தது. ‘நஷ்டப்பட்ட அந்த அம்மாவே இவ்ளோ காசுவல்லா இருக்காங்க, அதுனால தான் இப்படி அவங்களால கடை நல்லபடியா நடத்த முடியுது, இன்னிக்கு ஒரு நாள் தேவையே இல்லாம காலைல இருந்து வீணா இப்படி இருக்கமா கோபமா இருந்துட்டோமே…’ ஏதோ கொஞ்சம் தெளிந்தவனாகத் தன் வீட்டு மாடிப் படியில் ஏறினான். ‘ரமேஷ் தம்பி’ மறுபடியும் கீழ் வீட்டு ஓனர் குரல் – ‘மீட்டிங் நல்லா போனதா காலைல’. சிரித்த முகத்துடன் ‘நல்லா போச்சுங்க’ என்று கீழே வந்தான். ‘அச்சு குட்டி எப்படி இருக்கான்’ என்று கொஞ்சிக்கொண்டே குழந்தையை நோக்கிக் கையை நீட்டினான். இப்பொழுது சிரித்துகொண்டே குழந்தை அவனிடம் வந்தது.
Recent Comments